கத்தரிக்காயுடன் தக்காளி சேர்த்து இப்படி ஒரு கடையல் செய்து கொடுத்தால் சாதம் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அமைதியாக சாப்பிடுவார்கள்

brinjal
- Advertisement -

குழந்தைகளுக்கும் வீட்டிலுள்ள ஒரு சிலருக்கும் காரம் அதிகம் சேர்த்துள்ள குழம்புகள் என்றால் அன்றைய தினம் சாப்பிடுவது என்பது பிரச்சனையாக மாறிவிடும். இவர்களை சாப்பிட வைப்பதற்கு தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு கார குழம்பு, மீன் குழம்பு இது போன்ற குழம்புகள் செய்யும் பொழுதெல்லாம் இவர்களைப் பற்றிய கவலை நமக்கு அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒரு சிலருக்கு காய்கறிகள் என்றாலே பிடிப்பதில்லை. காய்கறிகள் சேர்த்து செய்யும் குழம்பு, பொரியல் இவற்றை விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. குழம்பில் ஏதாவது காய்கறி சேர்த்து இருந்தாலும் அதனை தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். எனவே கத்தரிக்காய், தக்காளி சேர்த்து இப்படி ஒரு மசியல் செய்து கொடுத்தால் அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதில் காரமும் குறைவாகத்தான் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 6, கத்தரிக்காய் – கால் கிலோ, பூண்டு – ஆறு பல், பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 2, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் கத்தரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும்.

பிறகு ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய் இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் தட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகு ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றிற்கு தேவையான 3 அல்லது 4 டம்ளர் தண்ணீரை ஊற்றி, கலந்து விட்டு, குக்கரை மூடி, அடுப்பின் மீது வைத்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து மத்து வைத்து கத்தரிக்காயை நன்றாகக் கடைந்து விட வேண்டும்.

அதன்பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இந்த தாளிப்பு மற்றும் கொத்தமல்லித் தழையையும் கத்தரிக்காயுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

- Advertisement -