சின்ன வெங்காய தக்காளி குருமா செய்வது எப்படி?

thakkali-kuruma
- Advertisement -

சின்ன வெங்காயம் சேர்த்து, எந்த  எந்த ரெசிபியை செய்தாலும் அதில் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து தான் இருக்கும். அந்த வரிசையில் சின்ன வெங்காயம் வைத்து சூப்பரான ஒரு தக்காளி குருமா ரெசிபியைத்தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். சுடச்சுட இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்திற்கு இது செம்மையான சைட் டிஷ் ஆக இருக்கும். சாதாரணமாக வைக்கும் தக்காளி குருமா வை விட, இதன் சுவை கூடுதலாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

கட்டாயம் இந்த குருமாவுக்கு சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும். 15 லிருந்து 20 சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸில் இருக்கும் 4 தக்காளி பழங்களை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (சின்ன வெங்காயம் கூடுதலாக தேவை என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி, அதில் சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – 2 சின்ன துண்டு, கிராம்பு – 2, அன்னாசி பூ – 1, பச்சை மிளகாய் இரண்டாக நறுக்கியது – 2, கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு இதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயங்களை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி – 2 நிமிடம் போல வதக்கி விடுங்கள்.

தக்காளி விழுதின் பச்சை வாடை நீங்கியவுடன் குழம்பு மிளகாய் தூள் இருந்தால் – 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கலாம். இல்லை என்றால் வர மிளகாய் தூள், வர மல்லித்தூள் தேவையான அளவு சேர்த்து, வதக்கி விட்டு ஒரு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி, மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு, கலந்து இதை அப்படியே கொதிக்க வையுங்கள். ஐந்து நிமிடங்கள் கொதிக்கட்டும்.

- Advertisement -

இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் – 1/2 மூடி அளவு தேங்காய் துருவல், 1 ஸ்பூன் பொட்டுக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு – 7, சோம்பு – 1 ஸ்பூன், கிராம்பு – 2 போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து இந்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் தக்காளி குருமாவில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். இதில் தாராளமாக தண்ணீர் ஊற்றலாம். முந்திரிப்பருப்பு பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து இருப்பதால், குருமா கொஞ்சம் திக்காக நமக்கு கிடைக்கும்.

இந்தக் குருமா கொஞ்சம் தண்ணீராக இருந்தால் தான் சுவை நன்றாக இருக்கும். ஆகவே தாராளமாக தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு தக்காளி குருமாவை கொதிக்க வையுங்கள். காரணம் தேங்காயில் கிராம்பு சேர்த்து அரைத்து இருப்பதால், அந்த பச்சை வாடை முழுவதும் நீங்க வேண்டும். 15 லிருந்து 20 நிமிடம் இந்த குருமா மிதமான தீயில் கொதித்து வந்ததும், இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட பரிமாறினால் அருமையான சுவையில் ஒரு தக்காளி குருமா தயார்.

இதையும் படிக்கலாமே: இனி கருங்கல்லையே போட்டாலும், அதை உங்க வீட்டு கிரைண்டர் அரைத்து தள்ளிவிடும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. உதவாத கிரைண்டரில் கூட பொங்க பொங்க உளுந்தை ஆட்டி எடுக்கலாம்.

பின்குறிப்பு: இந்த தக்காளி குருமாவில் இஞ்சி பூண்டு விழுது நாம் சேர்க்கவில்லை. உங்களுக்கு தேவை என்றால் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கும்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். கட்டாயம் சின்ன வெங்காயம் பயன்படுத்தி தான் இந்த குருமா வைக்க வேண்டும். பெரிய வெங்காயம் பயன்படுத்தி குருமா வைத்தால் சுவை கொஞ்சம் குறைவாக தான் தெரியும். இறுதியாக கொத்தமல்லி தழை மிக மிக அவசியம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -