வெங்காய சட்னி உரைப்பாக இப்படி மட்டும் செஞ்சி பாருங்க, எத்தனை இட்லி கொடுத்தாலும் பத்தவே பத்தாது சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்!

small-onion-kara-chutney
- Advertisement -

இந்த வெங்காய சட்னி அரைப்பதற்கு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும். உரைப்பாக சூப்பரான சுவையில் பச்சை மிளகாய் சேர்த்து இப்படி நீங்கள் ஒரு கார சட்னி அரைச்சு பாருங்க, எவ்வளவு இட்லி கொடுத்தாலும் பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு ருசியான இந்த வெங்காய சட்னி சுலபமாக எப்படி வீட்டில் அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, தக்காளி 2, உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி ஒரு சிறு துண்டு, பூண்டு பல் ரெண்டு, பச்சை மிளகாய் 2, புளி சிறு நெல்லிக்காய் அளவு, கருவேப்பிலை இரண்டு கொத்து, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி, உப்பு தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு கால் ஸ்பூன் சீரகம் 1/4 ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து, வர மிளகாய் ஒன்று.

- Advertisement -

வெங்காய சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 15 சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேலும் உங்கள் விருப்பம் போல நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வெங்காய சட்னி செய்வதற்கு பெரிய வெங்காயமும் சேர்த்து செய்யலாம், அது உங்கள் விருப்பம் தான். பின்னர் மற்ற தேவையான பொருட்களை கழுவி சுத்தம் செய்து தேவையானபடி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பூண்டு எந்த அளவிற்கு எடுத்தீர்களோ, அந்த அளவுக்கு இஞ்சி எடுத்தால் போதும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்குங்கள். ஒரு நிமிடம் லேசாக வதக்கியதும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி ஆகியவை மசிய வதங்கி வரும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து உருவி சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் புளிப்பு சுவைக்கு ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை சேர்த்து நன்கு வதக்கிய பின்பு ஆறவிட்டு விடுங்கள்.

ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் சுவையான வெங்காய சட்னி தயார்! இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க.

- Advertisement -