இந்த தவறுகளை செய்தாலும், நீங்கள் செய்த புண்ணியம் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விடும்.

thinking-men-astro
- Advertisement -

நாம புண்ணிய காரியங்களை செய்கின்றோமோ இல்லையோ, ஆனால் சில பாவ காரியங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய பாவ காரியங்கள், நாம் செய்த ஒரு சில புண்ணிய காரியங்களுக்கு கூட பலனை கொடுக்காமல் போய்விடும். வாழ்நாளில் அன்றாடம் இயல்பாக நாம் செய்யக்கூடிய இந்த தவறுகள் கூட வாழ்க்கையில் நமக்கு பாவத்தை சேர்த்து விடும். செய்த புண்ணியத்திற்கு பலன் கிடைக்காமல் அழித்துவிடும். அப்படிப்பட்ட தவறுகள் என்னென்ன. இந்த தவறுகளை நீங்கள் செய்பவர்களாக இருந்தால் இன்றோடு நிறுத்தி விடுங்கள். உங்களுடைய வாழ்வு வளம் பெறும்.

புறம் பேசுதல். ரொம்ப ரொம்ப தவறான ஒரு செயல். ஒருவர் நம் கண் முன்னே இல்லாத போது, அவரைப் பற்றி தாறுமாறாக பேசி இழிவு படுத்துவது. புறம் பேசக்கூடிய குணம் ஒரு மனிதனுக்கு இருக்கவே கூடாது. அது அவன் செய்த புண்ணியத்தை மொத்தமாக அழித்துவிடும். பெண்களும் புறம் பேசுவார்கள். ஆண்களும் புறம் பேசுவார்கள். ஆனால் அதிக அளவில் பெண்கள் வீட்டு வாசலில் அமர்ந்து பேசக்கூடிய பேச்சு ரொம்ப ரொம்ப பிரச்சினையை உண்டு பண்ணிவிடும். பக்கத்து வீட்டுக்காரம்மா, நாம இல்லாதப்ப, நம்மை பற்றி எதிர் வீட்டுக்காரரிடம் பேசும். எதிர் வீட்டுக்காரர் இல்லாத போது, அவரைப் பற்றி நம்மிடம் புறம் பேசும். இந்த பேச்சு நிம்மதியை கெடுத்து விடும் ஜாக்கிரதை.

- Advertisement -

இரண்டாவது, ஒரு சின்ன விஷயத்தை பேசி பேசி பெருசாக்குவது. அக்கம் பக்கம் வீட்டில் ஏதோ ஒரு தவறு நடந்திருக்கும். அந்த தவறை இல்லாததும் பொல்லாததும் பேசி பிரச்சினையை சில பேர் பெரிதாகி விடுவார்கள். நண்பர்கள் வீட்டில் ஏதாவது சண்டை வந்திருக்கும். அந்த நண்பர், நம்மிடம் அவர் வீட்டு பிரச்சனையை வந்து பகிர்ந்து கொள்வார். அப்படி சொன்னால் ‘சண்டை போடாதீங்க. விட்டுக்கொடுத்து செல்லுங்கள்’ என்று நாம் அறிவுரை சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘அந்த வாழ்க்கை உனக்கு தேவையே இல்லை. உன் குடும்பத்தை விட்டு நீ பிரிந்து சென்று விடு, அப்போதுதான் நீ இல்லாத அருமை உன் கணவருக்கு தெரியும் என்றோ, அல்லது உன் மனைவிக்கு தெரியும் என்றோ’, ஒரு குடும்பத்தை பிரிக்கும் வேலையை ஆண்களும் செய்யக்கூடாது. பெண்களும் செய்யக்கூடாது.

அடுத்தது பொறாமை குணம். நிறைய பேர் இன்று அவரவர்கள் வாழ்க்கையை பார்த்து அவரவர்கள் வாழ்வதே கிடையாது. அடுத்தவர்கள் போடுகின்ற வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், அடுத்தவர்கள் போடுகின்ற ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்று அடுத்தவர்களுடைய ஸ்டேட்டஸை, பார்த்து தன்னுடைய ஸ்டேட்டஸை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவறு. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். அடுத்தவர்கள் எப்படி வாழ்ந்தால் என்ன அதைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம். அடுத்தவர்கள் வாழுகின்ற ஆடம்பர வாழ்க்கையை நானும் வாழ வேண்டும் என்று நினைத்தால் அன்னைக்கே உங்களுடைய ஆட்டம் முடிந்தது.

- Advertisement -

அடுத்து, எல்லா விஷயத்திலும் முதலிடம் எனக்கு தான் என்று நிற்கக்கூடாது. என்னால் தான் எல்லாம் நடந்தது. நடந்த எல்லா நல்ல விஷயத்திற்கும் நான் தான் காரணம், என்று எவன் ஒருவன் தன்னைத்தானே உயர்த்தி தன்னைத்தானே புகழ்ந்து தற் புகழ்ச்சி பாடிக் கொண்டே இருக்கின்றானோ அவனுக்கும் வாழ்வில் பிரச்சனை தான். எல்லாம் கடவுள் செயல் என்று விட்டுவிட்டால் நமக்கு பிரச்சனை கிடையாது. (இப்படிப்பட்டவர்கள் ஏதாவது ஒரு கெட்டது நடந்து விட்டால், அந்த கெட்டதுக்கு முழுமையாக அடுத்தவர்களை கை நீட்டுவார்கள்.)

மேலே சொன்ன நான்கு விஷயங்களுமே மிக மிக இயல்பாக எளிமையாக எல்லா மனிதர்களிடத்திலும் நடக்கக் கூடிய தவறுகள் தான். ஆனால் இந்த சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டாலே பாவம் நம்மை வந்து சேராது. புண்ணியம் தானாக தேடி வரும் என்ற இந்த கருத்தோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -