ரோட்டுக் கடையில் கிடைக்கும் சுவையான குருமாவை அதே சுவையில் வீட்டிலேயும் செய்ய இந்த ரகசியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்

kuruma
- Advertisement -

என்ன தான் பெரிய பெரிய ஹோட்டல்களிலும், ரெஸ்டாரன்ட்களிலும் சென்று சாப்பிட்டாலும் தள்ளுவண்டி கடைகளில் கொடுக்கப்படும் சாம்பார், சட்னி, குருமா இவற்றின் சுவை அங்கு இருப்பதில்லை. சுவையான சாப்பாடு வேண்டுமென்றால் அனைவரும் சென்று சாப்பிடும் இடம் ரோட்டுகடையாக தான் இருக்கும். காலை, மதியம், இரவு எந்த நேரமாக இருந்தாலும் இதுபோன்ற கடைகளுக்கு தைரியமாக செல்லலாம், அங்கு சாப்பிட எதுவும் இல்லை என்று சொல்லமாட்டார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பி இங்கு சாப்பிட செல்வதற்கு முக்கியக் காரணம் இங்கு கொடுக்கப்படும் உணவுகளின் ருசிதான். அதிலும் இங்கு செய்யப்படும் சால்னா, குருமா இவற்றின் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். இவ்வாறு இந்த சுவையான குருமாவை நமது வீட்டிலேயும் அதே சுவையில் செய்ய இந்த ரகசியத்தை மட்டும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நீங்கள் செய்யும் குருமாவை ரசித்து சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 6, பூண்டு – 10 பல், பட்டை சிறிய துண்டு – 2, கிராம்பு – 4, ஏலக்காய் – 2, சோம்பு – ஒன்றரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புதினா – அரை கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், இட்லி மாவு – ஒரு கரண்டி.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடித் தேங்காயை துருவலாக துருவி வைக்க வேண்டும். பிறகு இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு 10 பல் பூண்டை தோல் உரித்து வைத்து, அதில் மூன்று பல் பூண்டைப் தேங்காய் துருவலுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 3 பச்சை மிளகாய், ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற் றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, சோம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் அரைக் கைப்பிடி புதினா தழை மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்றாக கொதித்ததும் இவற்றுடன் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான ரோட்டுக்கடை குருமா தயாராகிவிடும்.

- Advertisement -