உங்கள் வீட்டு சமையலில் மேலும் மணம் கூட்டும் அற்புதமான 10 குறிப்புகள்! இதையும் தெரிஞ்சி வச்சிக்கிட்டா நீங்களும் சமையல் கில்லாடி தான்.

chappathi-idli-powder
- Advertisement -

நம்ம வீட்டு சமையலில் எப்பொழுதும் சுவையும், ருசியும் அதிகமாக இருக்க அன்பையும், பாசத்தையும் கலந்து தயாரிக்கிறோம். உணவுப் பொருட்களில் இருக்கும் அக்கறையும் அந்த உணவுப் பொருட்களுக்கு மேலும் மேலும் சுவை தருகிறது. அந்த வகையில் உங்கள் வீட்டு சமையலில் மணமும், ருசியும் கூடுவதற்கு தேவையான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக! வாருங்கள் தொடர்ந்து அதனை இப்பதிவின் மூலம் காண்போம்.

குறிப்பு 1:
பருப்பு பொடி செய்யும் பொழுது துவரம் பருப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக உடைத்த கடலையுடன் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து பாருங்கள் ருசியும், மணமும் சூப்பராக இருக்கும். தேங்காய் கொப்பரை தேங்காயாக இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
தக்காளியை பயன்படுத்தி குருமா வைக்கும் பொழுது கொஞ்சம் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு பச்சையாக அரைத்து சேர்த்து குருமா வைத்து பாருங்கள் நல்ல சுவையும், மணமும் வீசும்.

குறிப்பு 3:
பொதுவாக உருளைக் கிழங்கை முழுதாக அப்படியே சேர்த்து வேக வைப்பதை விட, இரண்டாக வெட்டி சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடுவதோடு மட்டுமல்லாமல், ஒரே சீராகவும் வேகும். உருளைக்கிழங்கு வேக வைக்கும் பொழுது வெடிக்காமல் இருக்க, கொஞ்சம் உப்பை போட்டு வேக வைக்க வேண்டும். முட்டை வேக வைக்கும் பொழுதும் இது போல உப்பு போட்டு வேக வைத்தால் முட்டை வெடிக்காது.

- Advertisement -

குறிப்பு 4:
கலவை சாதங்கள் தயாரிக்கும் பொழுது உதிரி உதிரியாக வடித்த சாதத்தை பெரிய தாம்பாலத்தில் கொட்டி ஆற வைக்க வேண்டும். பின்னர் ரெண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சாதத்தை கிளறி பாருங்கள். உதிரி உதிரியாக எவ்வளவு நேரம் ஆனாலும் அதன் தன்மை மாறாமல், காய்ந்து போகாமல் அப்படியே சுவையாக இருக்கும்.

குறிப்பு 5:
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது பொதுவாக அவல் சேர்த்து அரைப்பார்கள். அவல் சேர்த்தால் மிருதுவான இட்லி வரும். அதே போல சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்து பாருங்கள் தோசை மொறு மொறு என்று கிரிஸ்பியாக வரும். இட்லியும் வெள்ளை வெளேரென மல்லிகை பூ போல மணக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
வாழைக்காய், வாழை பூ போன்றவற்றை சமைக்கும் பொழுது கைகளில் நறுக்கும் சமயத்தில் பிசுபிசுவென ஒட்ட ஆரம்பிக்கும். இது போல ஒட்டாமல் இருக்க, கைகளில் கொஞ்சம் எண்ணெயை தடவிக் கொள்வார்கள். அதற்கு பதிலாக உப்பு தடவிக் கொண்டு நறுக்கி பாருங்கள், கொஞ்சம் கூட ஒட்டாமல் இருக்கும்.

குறிப்பு 7:
சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசையும் போது வெதுவெதுப்பான தண்ணீரும், எண்ணெயும் சேர்த்து பிசைவது உண்டு. ஆனால் அதற்கு பதிலாக வெதுவெதுப்பாக இருக்கும் பாலை ஒரு கப் அளவிற்கு சேர்த்து இதே போல பிசைந்து பாருங்கள், சாஃப்டான பூரி மற்றும் சப்பாத்தி கிடைக்கும். ருசியும் சூப்பராக இருக்கும்.

குறிப்பு 8:
இட்லி பொடி அரைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் மட்டும் தனியா விதைகளை லேசாக வாணலியில் வறுத்து இட்லி பொடிக்கு தேவையான மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் வாசனை கமகமக்கும்.

குறிப்பு 9:
மிளகாய் வறுக்கும் பொழுது காம்பை நீக்கிவிட்டு வறுக்க கூடாது, காம்புடன் லேசாக வறுத்து எடுத்து ஆற வைத்து, பின்னர் காம்பை நீக்கிவிடலாம். மிளகாய் நெடி எடுக்காமல் இருக்க வறுக்கும் பொழுது கொஞ்சம் தூள் உப்பை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு 10:
தேங்காய் பர்பி தயார் செய்யும் பொழுது தேங்காய் துருவலுடன் சிறிதளவு பாதாம் மற்றும் முந்திரியை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அரைத்து சேர்த்து பர்பி தயாரித்தால் நீங்கள் பர்பி வில்லைகள் போடும் பொழுது தனித்தனியாக உதிராமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -