ஆரோக்கியம் தரும் சிறு கீரை சாதம் 10 நிமிடத்தில் இப்படி செய்தால் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாது தெரியுமா?

keerai-sadham2
- Advertisement -

உணவில் தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையை குழம்பு வைத்து சாப்பிடுவது போல, சாதத்தில் பிசைந்து கூட கலவை சாதம் செய்து சாப்பிடலாம். கருவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம் போல கீரை சாதம் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் வழு பெறுவதோடு, கண்களுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சிறு கீரையில் இருக்கும் சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து பெண்களுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை நல்கும். மேலும் இதில் இருக்கும் புரத சத்து, நீர் சத்து, கொழுப்பு சத்து, மாவு சத்து போன்ற அனைத்து சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை. தினமும் ஒவ்வொரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்களுக்கு குட் பை சொல்லலாம். அந்த வகையில் சிறு கீரை சாதம் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

சிறு கீரை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
ஆய்ந்த சிறு கீரை – மூன்று கைப்பிடி அளவிற்கு, பூண்டு – 4 பல், நறுக்கிய தேங்காய் துண்டுகள் – கால் கப், பச்சை மிளகாய் – 3, புளி – சிறிய நெல்லிக்காய் அளவிற்கு, சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு, கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வர மிளகாய் – 2 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், வடித்த சாதம் – ஒரு கப், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

சிறு கீரை சாதம் செய்முறை விளக்கம்:
முதலில் சிறுகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் இந்த ஆரோக்கியம் மிகுந்த சிறு கீரை சாதம் செய்து விடலாம். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

keerai-sadham

எண்ணெய் காய்ந்ததும் அதில் பூண்டு பற்கள் தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் வதங்கியதும், பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு தன்மைக்கு புளி கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்கு வறுபட்டதும் அலசி வைத்த கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கீரை வதங்கி சுருங்கியதும் அதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மீண்டும் ஒரு வாணலியை வைத்து அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பருப்பு வகைகள் பொன்னிறமாக வதங்கியதும் சீரகம், வர மிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பச்சை வாசம் போனதும் அரைத்து வைத்துள்ள கீரை கலவையை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

keerai-sadham1

இவைகள் வதங்கி வந்ததும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை கலந்து கொள்ளுங்கள். சாதத்தை கலந்து நன்கு பிரட்டி எல்லா இடங்களிலும் ஒன்று போல கலந்ததும் அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் தரக்கூடிய இந்த சிறு கீரை சாதம் அலாதியான சுவையில் இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -