இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த தேங்காய் மிளகாய் சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு இன்னும் கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவீர்கள்

chutni
- Advertisement -

காலை மற்றும் மாலை அனைவரது வீடுகளிலும் இட்லி, தோசை தான் உணவாக இருக்கும். அதிலும் இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய சட்னி வகைகள் தான் சைட் டிஷ்ஷாக இருக்கும். அப்படி ஒரே வகையான சட்னியை தினந்தோறும் செய்து சாப்பிடாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சட்னியை சுவைத்துப் பாருங்கள். அவ்வாறு தேங்காயுடன் மிளகாய் சேர்த்து செய்யும் இந்த சுவையான கார சட்னியையும் ஒருநாள் செய்து பாருங்கள். ஐந்து இட்லி சாப்பிட்டாலும் பத்தாது இன்னும் இரண்டு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இட்லி, தோசையுடன் இந்த சைடிஷ் அசத்தலாக இருக்கும். இதனைச் செய்வதற்கும் ஐந்து நிமிடம்தான் தேவைப்படும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, வரமிளகாய் – 15, பொட்டுக்கடலை – 5 ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு – ஒரு ஸ்பூன், பூண்டு – 5 பல், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயைத் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதிலிருந்து தேங்காய் சில்லுகளை வெளியே எடுக்க வேண்டும். பிறகு காய் துருவல் பயன்படுத்தி தேங்காயை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு 15 காய்ந்த மிளகாயை எடுத்துக்கொண்டு, அதன் காம்புகளை கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிய துண்டு இஞ்சியைத் தோல் சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஐந்து பல் பூண்டை தோல் உரித்து வைக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் வரமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பின்னர் அதனுடன் புளி பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் போதும். சுவையான தேங்காய் மிளகாய் சட்னி தயாராகிவிடும்.

- Advertisement -