நாவில் வைத்தவுடன் சுள்ளென்று காரம் உறைக்கும் சுவையான மிளகாய் கிள்ளி சாம்பாரை ஒரு முறை இப்படி செய்து சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் தட்டு நிறைய சாதம் போட்டாலும் பத்தாது என்பார்கள்

sambar
- Advertisement -

வாரத்திற்கு மூன்று முறையாவது அனைவரது வீட்டிலும் சாம்பார் வைத்துவிடுவார்கள். ஒரு நாள் பருப்பு சாம்பார், ஒரு நாள் தக்காளி சாம்பார், ஒரு நாள் காய் சாம்பார், வெங்காய சாம்பார் என சாம்பாரை வித விதமான சுவையில் செய்து கொடுப்பார்கள். ஆனால் எத்தனை முறை இந்த சாம்பார் வைத்தாலும் அனைவரும் சலிக்காமல் சாப்பிடுவார்கள். அப்படி பருப்பு சேர்த்து செய்யும் இந்த சாம்பாருக்கு பலரும் ரசிகர்கள் தான். கல்யாண பந்தி, ஓட்டல் என சாப்பாடு என்றாலே சாம்பார் இல்லாமல் இருக்காது. இதில் சேர்க்கப்படும் பொருட்கள் என்னவோ ஒன்று தான். ஆனால் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். இந்த பிரபலமான சாம்பாரை மிகவும் காரமாகவும், ருசியாகவும், இப்படி சிம்பிளாகவும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – ஒரு டம்ளர், வெங்காயம் – 3, தக்காளி – 4, புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு – 5 பல், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், வரமிளகாய் – 10, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் ஒரு டம்ளர் துவரம்பருப்பை சேர்க்க வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி, இரண்டு முறை சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து விட வேண்டும். பிறகு குக்கரை மூடி, விசில் போட்டு அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

பிறகு குக்கர் 4 விசில் வரும்வரை துவரம்பருப்பை வேகவைத்து எடுக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் தக்காளியையும் அதே போல் நறுக்கி வைக்க வேண்டும். பிறகு 5 பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். அடுத்ததாக நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கரைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கடாயை அடுப்பில் மீது வைத்து, கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் 10 வர மிளகாயை இரண்டாகக் கிள்ளி எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். புளி கரைசல் 5 நிமிடம் நன்றாக கொதித்ததும் வேக வைத்த பருப்பை மத்து வைத்து கடைந்து, இதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து சாம்பார் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -