காரசாரமான ‘கார வெங்காய சட்னி’ இப்படி செஞ்சா 10 தோசை கூட தாராளமாக உள்ள போயிட்டே இருக்கும்!

- Advertisement -

வெங்காய சட்னியை காரசாரமாக நிறைய மிளகாய்களை போட்டு இப்படி ஒருமுறை செய்து பார்த்தால் அதன் சுவையே அலாதியானதாக இருக்கும். தினமும் ஒரே வகையான சட்னி சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு இந்த காரசார வெங்காய சட்னி வேற லெவல்ல சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, சூடான சாதத்திற்கு கூட தொட்டுக் கொண்டு இந்த சட்னியை சாப்பிட்டால் அவ்வளவுதாங்க அருமையாக இருக்கும். வெளியில் வைத்தாலே நான்கு நாட்கள் வரை கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்தால் பத்து நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். இந்த காரசாரமான வெங்காய சட்னி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

onion-cutting

கார வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு – 20 பல், பெரிய வெங்காயம் – மூன்று, புளி – சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு, வர மிளகாய் – 15, பச்சை கறிவேப்பிலை – 3 கொத்து, பெரிய தக்காளி – 1, உப்பு – தேவையான அளவிற்கு, கடுகு – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

கார வெங்காய சட்னி செய்முறை விளக்கம்:
இந்த கார வெங்காய சட்னி செய்யும் போது முதலில் பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதைப் போல வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் விரும்புபவர்கள் தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும். தேங்காய் எண்ணெய்யை விரும்பாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி செய்யலாம். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து சூடு ஏற்றிக் கொள்ளுங்கள். வாணலி சூடானதும் 2 டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள்.

spicy-onion-chutney

பின்னர் வெந்தயம், சீரகம் போட்டு கருகாமல் லேசாக தாளித்துக் கொள்ளுங்கள். தோல் உரித்த பூண்டு பற்கள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் வர மிளகாய்களை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய்களை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பின்னர் வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி வந்தவுடன் ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு புளி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவற்றுடன் இரண்டு கொத்து கறிவேப்பிலையை பச்சையாக சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு மிகவும் நைசாக அரைத்து விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

spicy-onion-chutney2

கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து 2 நிமிடம் நன்கு பச்சை வாசம் போக வதக்க வேண்டும். வதக்கும் பொழுது அடுப்பைக் குறைத்து வைத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் மேலே தெறிக்கும். லேசாக வதங்கிய பின்பு அடுப்பை அணைத்து சுட சுட இட்லி, தோசையுடன் பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சூப்பரான சுவையில் காரசாரமான வெங்காய கார சட்னி இதே போல நீங்களும் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -