தக்காளி விலை குறையும் வரை காரசாரமாக சாப்பிட இந்த சுவையான வெங்காய சட்னியை இப்படி செய்து பாருங்கள்

big-onion-chutney
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் தினமும் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு சட்னியை செய்து விடுகிறோம். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சட்னி என்றால் அது தக்காளி சட்னி தான். ஆனால் இப்போது மழையின் காரணமாக தக்காளியின் விலை அதிகமாக இருப்பதால் தக்காளி சட்னி செய்வதென்பது அனைவரின் இல்லங்களிலும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் இட்லி, தோசைக்கு காரசாரமான சட்னி இருந்தால் மட்டுமே அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். அதற்காக தேங்காய் சேர்க்காமல் செய்யும் இந்த வெங்காய சட்னியை இப்படி செய்து பாருங்கள். இதனுடன் தக்காளி சேர்க்க வில்லை என்பதே தெரியாத அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

jowar-dosai3

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, வரமிளகாய் – 7, மிளகாய் தூள் – அரை ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 4 ஸ்பூன், பூண்டு – 10 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, உப்பு – முக்கால் ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் அரைஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சிறிய துண்டு இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

பூண்டு

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தோல் உரித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் 7 வரமிளகாய் சேர்த்து ஒருமுறை கலந்து விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றுடன் கொத்தமல்லி தழையை கில்லி சேர்த்து, ஒரு முறை வதக்கிக் கொண்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

onion-chutni

பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள வெங்காய சட்னியுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இந்த சட்னியுடன் இட்லி அல்லது தோசை சேர்த்துக் கொடுத்தால் போதும். வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த சட்னியை உடனே உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்.

- Advertisement -