மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட இப்படி வித்தியாசமான கருவேப்பிலை குழம்பை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். செய்த அனைத்து சாதமும் மிச்சமில்லாமல் காலியாகிவிடும்

curry-leaf1
- Advertisement -

மதிய உணவு என்றாலே அதனுடன் சேர்த்து சாப்பிட குழம்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. காரக்குழம்பு, சாம்பார் என்று செய்து வைத்தால் வீட்டிலுள்ளவர்கள் இன்றும் அதே குழம்பு தானா என முகத்தை சுளித்துக் கொள்வார்கள். ஆனால் குழம்பு சேர்க்காமல் சாப்பிடவும் முடியாது. இந்த குழம்பில் ம் மசாலாவின் சுவை சற்று தூக்கலாக இருந்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு வீட்டில் சமைக்கும் ஒவ்வொரு குழம்பையும், ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புது ருசியுடன் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி கருவேப்பிலை வைத்து ஒரு மசாலா குழம்பை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குழம்பு நோய் எதிர்ப்பு சக்திக்கும், முடி வளர்ச்சி அதிகரிப்பதற்கும் பெருமளவு உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – இரண்டு, மிளகு – ஒரு ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கறிவேப்பிலையை சுத்தமாக அலசி உலர வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 50 கிராம் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் முதலில் கருவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொண்டு, அதனை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயில் வர மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, அனைத்தையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றையும் கறிவேப்பிலையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த பொருட்களுடன் எலுமிச்சை அளவு புளியையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மறுபடியும் கடாயை சூடு படுத்தி, அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் கரைத்து வைத்துள்ள இந்த மசாலா கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விடவேண்டும். சிறிது நேரம் இதனை கொதிக்க விட்டால் போதும். சுவையான கறிவேப்பிலை குழம்பு தயாராகிவிடும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -