கிராமத்து ஸ்டைலில் இட்லி சாம்பார் பருப்பு இல்லாமல் இப்படி ஒன் டைம் செஞ்சு பாருங்க! செமையா இருக்கும்.

idli-sambar-recipe
- Advertisement -

கிராமத்து முறையில் பருப்பு இல்லாத சுவையான இட்லி சாம்பார் செய்வதற்கு ரொம்பவே சுலபமானதாக இருக்கும். இட்லி, தோசை, ஆப்பம் போன்றவற்றுக்கு சூப்பரான சைட் டிஷ் ஆக இருக்கும் இந்த வித்தியாசமான சாம்பார் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும். அத்தகைய சுவை மிகுந்த இந்த இட்லி சாம்பார் செய்வது எப்படி? என்பதை நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

idli-sambar1

இட்லி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 2, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் – 4, இட்லி மாவு – இரண்டு கரண்டி, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

இட்லி சாம்பார் செய்முறை விளக்கம்:
இட்லி சாம்பார் செய்வதற்கு முதலில் இரண்டு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு குக்கரில் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றுடன் இரண்டு பெரிய தக்காளிகளை துண்டுகளாக நறுக்கி சேருங்கள். 2 பச்சை மிளகாயை சேர்த்து, இவை மூழ்கும் அளவிற்கு அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து குக்கரை வையுங்கள்.

idli-sambar2

இரண்டிலிருந்து மூன்று விசில் குக்கருக்கு தகுந்தார் போல் வைத்து எடுங்கள். பிரஷர் முழுவதுமாக இறங்கியதும் மூடியைத் திறந்து எந்த அளவிற்கு உங்களால் நைஸாக மைய கடைய முடியுமோ! அந்த அளவிற்கு மத்து போட்டு கடைந்து கொள்ளுங்கள் அல்லது ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை, 4 காய்ந்த மிளகாயை காம்பு நீக்கி சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த கலவையை ஊற்றி அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வரும் பொழுது இரண்டு கரண்டி அளவிற்கு நீங்கள் அரைத்து வைத்துள்ள இட்லி மாவை ஊற்றிக் கொள்ளுங்கள்.

idli-sambar3

இட்லி மாவு தான் இந்த சாம்பாரை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரப் போகிறது. கிராமத்தில் கொடுக்கும் சாம்பாருக்கு இட்லி மாவு ஊற்றினால் சுவை அசத்தலாக இருக்கும். நன்கு கொதித்து கெட்டியான பதத்திற்கு சாம்பார் உங்களுக்கு வந்ததும் நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட இட்லி, தோசை மற்றும் ஆப்பத்துடன் பரிமாற வேண்டியது தான். வித்தியாசமான முறையில் வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடிய இந்த இட்லி சாம்பாரை நீங்களும் ஒரு முறை இதே முறையில், இதை அளவுகளில் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -