கர்ணன் செய்யாத ஒரே தானம் எது தெரியுமா?

karnan

மகாபாரதத்தில் கௌரவர்களுடன் இருந்தபோதும் அனைவராலும் விரும்பப்படுபவனாகத் திகழ்ந்தவன் கர்ணன். அதற்குக் காரணம் அவன் செய்த தான, தர்மம். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன். இப்போதும், நாம் கொடையின் சிறப்பைப் பற்றி கூறும்போது கர்ணனைத்தான் குறிப்பிடுகிறோம். அந்த அளவுக்குத் தானம் செய்வதில் சிறந்து விளங்கியவன் கர்ணன்.
karnan

மகாபாரதப் போரில் மடிந்த கர்ணன் நேராகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் பசி மட்டும் வாட்டி எடுக்கின்றது.

‘சொர்க்கத்தில் பசியே எடுக்காது என்று சொல்வார்கள். ஆனால், நமக்கு மட்டும் பசி வாட்டி எடுக்கிறதே?’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது நாரத மகரிஷி தோன்றுகிறார்.

heaven

சரி தன் சந்தேகத்தை நாரதரிடம் கேட்கலாம் என்று முடிவுசெய்கிறான் கர்ணன்.

”நாரதரே, சொர்க்கத்தில் பசி போன்ற உணர்வுகள் தோன்றாது என்று கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் எனக்கு மட்டும் பசி வாட்டி எடுக்கிறதே ஏன்? ” என்று கேட்கிறான்.

- Advertisement -

அதற்கு நாரதர் “உன் பசி போக ஒருவழி இருக்கிறது. உன் ஆள்காட்டி விரலை உன் வாயில் வைத்துக்கொள் உனக்குப் பசிக்காது” என்கிறார்.

அதன்படி கர்ணன் தன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்ததும் பசி நீங்கிவிடுகிறது. ஆனால், விரலை எடுத்தால் மீண்டும் பசி வந்து வாட்டுகிறது.

heaven

அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள மீண்டும் நாரத மகரிஷியை நினைக்கிறான் கர்ணன். நாரத மகரிஷியும் கர்ணனுக்கு எதிரில் தோன்றுகிறார்.

அவரிடம் “நாரதரே நீங்கள் சொன்னதுபோல் என் ஆள்காட்டி விரலை வாயினுள் வைக்கும்போது எனக்குப் பசி அடங்கிவிடுகிறது. ஆனால், என் விரலை வாயிலிருந்து எடுத்துவிட்டால் எனக்கு மீண்டும் பசிக்கிறதே என்ன காரணமாக இருக்கும்?” என்கிறான் வருத்தத்தோடு.

heaven

நாரதர் “கர்ணா உன் வாழ்க்கையில் அத்தனை தானங்களையும் செய்த நீ, அன்னதானத்தை மட்டும் செய்ததில்லை. அதனால்தான் இங்கே உனக்குப் பசி ஏற்படுகிறது. ஆனால், ஒரே ஒருமுறை அன்னசத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்ட ஒருவருக்கு உன் ஆள்காட்டி விரலால் வழிகாட்டியுள்ளாய். அதனால் உன் ஆள்காட்டி விரல் மட்டுமே அன்னதானப் பலன் பெற்றது” என்கிறார்.

‘அன்னதானத்துக்கு வழிதான் காட்டினோம் அதற்கே இவ்வளவு புண்ணியம் என்றால் அன்னதானம் எவ்வளவு உன்னதமானது!’ என்பதை உணர்ந்தான் கர்ணன்.

‘மீண்டும் ஒரு பிறவி எடுக்கவேண்டும். அப்போது தானத்தில் சிறந்த அன்னதானத்தை அளப்பரிய வகையில் செய்யவேண்டும்’ என்று பரம்பொருளிடம் வேண்டிக்கொள்கிறான்.

மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டௌன்லோட் செய்து பயன் பெறுங்கள்.