காய்கறி வத்தல் குழம்பை இவ்வாறு மசாலா அரைத்து செய்து பாருங்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட குண்டான் குழம்பும் பத்தாது.

kulambu
- Advertisement -

வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு. மாங்காய் வத்தல், மிளகாய் வத்தல், தக்காளி வத்தல், சுண்டைக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல் இவ்வாறான வத்தல்களை வைத்து குழம்பு செய்யலாம். வத்தல் என்பது காய்கறிகளை உப்புக் கலந்த மோரில் ஊறவைத்து அவற்றை நான்கு அல்லது ஐந்து நாட்கள் வெயிலில் உலர்த்தி பின்னர் பயன்படுத்துவதாகும். இவ்வாறான வத்தலை பயன்படுத்தி ஒரு சுவைமிக்க வத்தல் குழம்பை எவ்வாறு சமைப்பது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

manathakkali-vathal

தேவையான பொருட்கள்:
வத்தல் – 50 கிராம், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, பூண்டு – 10 பல், புளி – 100 கிராம், நல்லெண்ணெய் – 50 கிராம், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு, கறிவேப்பிலை – இரண்டு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
தனியா – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 10, சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், கடலைப் பருப்பு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை மூடி.

dry-fry

செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தனியா, வரமிளகாய், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து கொண்டு, அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் புளியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

puli-karaisal

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கடாய் வைத்து, கடாய் சூடானதும் அதில் நல்லெண்ணெய் சேர்த்து, காய்கறி வத்தல்களை பொரித்து கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் பூண்டையும் கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அவற்றையும் வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் பொரித்து வைத்துள்ள வத்தல்களையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் இவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொண்டு, கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்க வேண்டும். இவை நன்றாக கொதித்ததும் இவற்றுடன் உப்பு சேர்த்து, ஏழு நிமிடங்கள் அடுப்பினை சிறுதீயில் வைத்து குழம்பினை கொதிக்க விட வேண்டும். பின்னர் இறுதியாக சிறிய துண்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி குழம்பை இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான காய்கறி வத்தல் குழம்பு தயாராகிவிட்டது.

vaththa-kuzhambu3

இதனை சாதத்துடன் சேர்த்து, சாப்பிட கொடுத்தால் இதன் சுவைக்கு குண்டன் குழம்பும் பத்தாது. வீட்டில் உள்ளவர்கள் சலிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -