வேர்க்கடலையை வைத்து இப்படியும் சட்னி அரைக்கலாம். வித்தியாசமான வேர்க்கடலை கார சட்னி அரைப்பது எப்படி?

tomato-coconut-chutney
- Advertisement -

எப்போதும் போல இல்லாமல் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள காரசாரமான வேர்க்கடலை சட்னி அரைப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு விதமாக வேர்கடலை சட்னி அரைப்பாங்க. இந்த முறையில் ஒருவாட்டி நீங்க கண்டிப்பா சட்னி அரைச்சு ட்ரை பண்ணி பாக்கணும். ஒரு வித்தியாசமான சுவை கிடைக்கும். காரச் சட்னி போலவும் இருக்கும். அதேசமயம் வேர்க்கடலை வாசமும் வீசும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வர மிளகாய் – 6, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கி வந்த பிறகு, பெரிய தக்காளி பழம் – 2 நறுக்கி போட்டு மீண்டும் நன்றாக வதக்குங்கள். தக்காளி பழம் நன்றாக வெந்து குழைந்து பச்சை வாடை நீங்க வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, வறுத்த வேர்க்கடலை தோல் உரித்தது – 3 கைப்பிடி அளவு, போட்டு எல்லா பொருட்களையும் மீண்டும் இரண்டு நிமிடம் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த விழுது நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை கொஞ்சம் திக்காகவே அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் வேர்க்கடலை சேர்த்து இருப்பதால் நன்றாக திக்காக நமக்கு ஒரு சட்னி காரசாரமான சுவையில் கிடைத்திருக்கும். தேவைப்பட்டால் இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து, மணக்க மணக்க சட்னியில் கொட்டி நன்றாக கலந்து இட்லிக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். அருமையாக இருக்கும். கல் தோசை பணியாரத்திற்கும் சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வித்தியாசமான சுவையில் நல்ல ஒரு சைடு டிஷ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.

பின்குறிப்பு: சில பேருக்கு சட்னியில் அதிகமாக வெங்காய வாடை வீசினால் பிடிக்காது. அதாவது இந்த சட்னியில் இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயம் வைத்து இருக்கிறோம் அல்லவா. தேவைப்பட்டால் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி வைத்து கூட இந்த சட்னியை அரைக்கலாம். இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.

- Advertisement -