ஒருநாள் கிராமத்து ஸ்டைலில் இப்படி கூட்டாஞ்சோறு செய்யுங்கள். சுட சுட தட்டில் வைத்து பரிமாறி கொடுத்தால் போதும். வைத்த நிமிடத்திலேயே அனைத்தும் காலியாகி விடும்

bisibel
- Advertisement -

கூட்டாஞ்சோறு என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது சிறுவயதில் குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடிய தருணங்கள் தான். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பொருள்கள் என எடுத்து வந்து, அனைத்தையும் ஒன்றாக சேர்த்து உப்பு, காரம் எதனையும் பார்க்காமல் சமைத்து ஒன்றாக சாப்பிடுவது என்பது ஒரு தனி சந்தோஷம் தான். அப்படி கிராமங்களில் செய்யக்கூடிய ஒரு கூட்டாஞ்சோறை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம். இவ்வாறு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சமைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை வேறு விதமாகத்தான் இருக்கும். வாருங்கள் கமகம வாசத்துடன் சுவையான கூட்டாஞ்சோறை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி – 250 கிராம், துவரம் பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன், முருங்கைக் கீரை – இரண்டு கைப்பிடி, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், கத்தரிக்காய் – 4, அவரைக்காய் – 5, வாழைக்காய் – ஒன்று, உருளைக்கிழங்கு – 1, கேரட் – 1, பீன்ஸ் – 5, தேங்காய் துருவல் – கால் கப், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு, மிளகு – அரை ஸ்பூன், வர மிளகாய் – 3.

- Advertisement -

செய்முறை:
முதலில் காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, நன்றாக கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 200 கிராம் அரிசியை சுத்தமாக கழுவி, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து அதில் 100 கிராம் துவரம் பருப்பு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும். துவரம் பருப்பு முக்கால் பங்கு வெந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து வேக விட வேண்டும்.

- Advertisement -

பிறகு மற்றொரு கடாயில் மிளகு, சீரகம், வரமிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயம், வெந்தயம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இறுதியாக தேங்காய் துருவலையும் சேர்த்து லேசாக வதக்கி விட்டு, இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு காய்கறிகள் நன்றாக வெந்ததும் இவற்றுடன் அரிசியையும் சேர்த்து வேக வைக்கவேண்டும்.

சிறிது நேரத்திற்கு பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து அரிசி வேகும் வரை அப்படியே விட வேண்டும். பிறகு இறுதியாக அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து கலந்து விடவேண்டும். பின்னர் ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையையும் சேர்த்து விட வேண்டும். பின்னர் தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டாஞ்சோறுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -