எந்த ராசிக்காரர் எந்த கோயிலிற்கு சென்றால் அதிஷ்டத்தை அள்ளலாம் தெரியுமா?

astrology

மேஷம்
meshamமேஷத்தில் பிறந்த நீங்கள், சிங்கம்போல இருப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும், குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் 5-ம் இடம், சிம்ம ராசிக்கு உரியது. அதற்கு அதிபதி சூரியன். எனவே, உங்களைவிட உங்கள் பிள்ளைகள் புத்திக்கூர்மையும், செல்வ வளமும் பெற்றிருப்பார்கள்.

மேஷ ராசி கோயில்கள் :

உங்கள் ராசிக்கு உகந்தவை மலைத் தலங்கள். அதிலும், முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக, பழநி திருத்தலம். தனித்தன்மை பெறவேண்டும் என்ற தாகத்தோடு முருகப்பெருமான் வந்து அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலம் பழநி. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு.

அசுவினி: இந்த நட்சத்திரக்காரர்கள் மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசித்து வரலாம். திருச்செந்தூர் தலமும் உகந்தது.

பரணி: அழகர் மலைக்குச் சென்று கள்ளழகரைத் தரிசித்து வாருங்கள்.

கிருத்திகை முதல் பாதம்: நாகப் பட்டினம்-திருவாரூர் பாதையில் உள்ள சிக்கல் தலத்துக்குச் சென்று சிங்கார வேலனைத் தரிசித்து வழிபட்டால், நலன்கள் யாவும் கைகூடும்.

- Advertisement -

ரிஷபம்
rishabamரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். உங்களை எதிர்ப்பவர்கள்தான் தோற்றுப் போவார்கள். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள்.

ரிஷப ராசி கோயில்கள் :

ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம்  பெறும். நந்தியெம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்; இனியவை யாவும் நடந்தேறும்.

கிருத்திகை 2, 3, 4-ம் பாதங்கள்: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் தலத்துக்குச் சென்று முருகனை வழிபடலாம்.

ரோகிணி: மயிலாடுதுறை அருகில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ள தேரழுந்தூர் சென்று ஆமருவியப்பனை வழிபட்டு வாருங்கள்.

மிருகசீரிடம் 1,2-ம் பாதங்கள்: சுவாமிமலையில் அருளும் ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்; நலன்கள் யாவும் கைகூடும்.

மிதுனம்
midhunamஎந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல துல்லியமாக நீதி வழங்குவதில் வல்லவர்கள் மிதுன ராசிக்காரர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம்கூட உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘எங்கேயாவது கேவலமாக நினைச்சுக்கப் போறாரு’ என்று தவிர்ப்பீர்கள். அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சிற்சில தடைகள் ஏற்படலாம்.

மிதுன ராசி கோயில்கள் :

நீங்கள் சென்று தரிசித்து வழிபடவேண்டிய திருத்தலம் திருத்தொலைவில்லி மங்கலம்.

திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருத்தொலைவில்லி மங்கலம். நூற்றெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான்.

மிருகசீரிடம் 3, 4-ம் பாதங்கள்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வழிபடுங்கள்.

திருவாதிரை: சிதம்பரம் ஆடல் வல்லானை தரிசித்து வாருங்கள்.

புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள்:  கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரைத் தரிசித்து வாருங்கள்; வளம் பெருகும்.

கடகம்
kadagamநீங்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள்.

கடக ராசி கோயில்கள் :

சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அவ்வகையில், நீங்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

புனர்பூசம் 4-ம் பாதம்: காஞ்சி காமாட்சியை வழிபட்டு வாருங்கள்.

பூசம்: குமரி பகவதியம்மனைத் தரிசித்து வருவது சிறப்பு.

ஆயில்யம்:
 ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் வடபத்ரசாயியையும் வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

சிம்மம்
simmamநீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்வது என்பது உங்கள் அகராதியிலேயே இல்லை. சிந்தனை, சொல், செயல் என்று அனைத்திலும் வேகம் காட்டும் நீங்கள் அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பீர்கள். பின்னால் இருந்து குறை கூறுவதும், உடன் இருந்தே துரோகம் செய்வதும் உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. உணவு விஷயத்தைப் பொறுத்தவரை, சூடாகவும் சுவையாக வும் இருக்கவேண்டும் என்றே விரும்புவீர்கள்.

சிம்ம ராசி கோயில்கள் :

ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை நீங்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர, அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும்.

மகம்: உங்கள் வாழ்க்கை சுகப்பட நீங்கள் தரிசிக்க வேண்டிய தலம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயில்.

பூரம்: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்துக்குச் சென்று குற்றாலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

உத்திரம் 1-ம் பாதம்: ஈஸ்வரன் ஆட்சீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்புரியும் அச்சிறுப்பாக்கம் திருத்தலம் உங்களுக்கு விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். திரிநேத்ர முனிவர் வழிபட்ட சிவலிங்கம் ஒன்றும் இங்கு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

கன்னி
kanniகன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள். உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள். பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள்.

கன்னி ராசி கோயில்கள் :

உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும், நீங்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும் ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள்: சென்னை திருவலிதாயத்தில் ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லீசர் எனும் திருவலி தாயநாதரை வணங்குதல் நலம்.

அஸ்தம்: 
திருக்கோஷ்டியூரில் அருள்பாலிக்கும் திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீஉரகமெல்லணையானை வணங்குதல் நலம்.

சித்திரை 1, 2-ம் பாதங்கள்: சிக்கலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிங்காரவேலரை கார்த்திகையில் வணங்குதல் நலம்.

துலாம்
thulamமற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள். நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள்.

துலாம் ராசி கோயில்கள் :

நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி.

சித்திரை 3, 4-ம் பாதங்கள்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை அர்த்தஜாம பூஜையின்போது வணங்கவும்.

சுவாதி: அரக்கோணத்துக்கு அருகில் உள்ள சோளிங்கபுரத்தில் அருள்பாலிக்கும் சோளிங்கர் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வணங்கினால் நன்மை உண்டாகும்.

விசாகம் 1,2,3-ம் பாதங்கள்: திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானை வணங்குங்கள்; வாழ்க்கை வளம் பெறும்.

விருச்சிகம்
virichigamஎத்தனை கஷ்டங்கள் வந்தாலும், உங்களை நீங்களே தேற்றிக் கொள்வீர்கள். எதையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பீர்கள். பதுங்கிப் பின்பு பாயும் புலியைப் போன்றவர்கள் நீங்கள். சிறிய அளவிலாவது உங்கள் பெயரில் சொத்து எப்போதும் இருக்கும். சிலருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும்.

விருச்சிக ராசி கோயில்கள் :

மிகப் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடுவது நல்லது. அப்படி ஜீவசமாதி அமைந்திருக்கும் தலம்தான் நெரூர். இந்தத் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

பிரச்னை வரும் சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எல்லாம் இத்தலத்தை தரிசித்த மாத்திரத்தில் நீங்கும். இத்தலம் கரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

விசாகம் 4-ம் பாதம்: திருவனந்தபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஹரிலட்சுமி உடனுறை ஸ்ரீஅனந்தபத்மநாபனை ஏகாதசி திதியில் வணங்குதல் நலம்.

அனுஷம்: 
காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்குதல் நலம்

கேட்டை: திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மன் மற்றும் சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆகியோரை வணங்கி வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.

தனுசு
dhanusuநீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவீர்கள். எந்த ஒரு விஷயமானாலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். ஏனெனில், உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும்.  நட்புக்கும் குணத்துக்கும் மட்டுமே மரியாதை தருவீர்கள். மிகப் பெரிய செல்வந்தரே ஆனாலும், உங்களை சிறிய அளவில் அவமதித்தார் எனில், அவரை அறவே ஒதுக்குவீர்கள்.

தனுசு ராசி கோயில்கள் :

இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும்.

திருப்புட்குழி திருத்தலம் சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம்.

மூலம்: சமயபுரத்தில் அருள்தரும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்கி வாருங்கள்; உங்கள் வாழ்க்கை நலம் பெறும்.

பூராடம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.

உத்திராடம் 1-ம் பாதம்: வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீபொய்யாமொழி கணபதியையும் வணங்கி வாருங்கள். நலமே விளையும்!

மகரம்
magaramமகரம் என்பது கடல் வீடு. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கின்றனவோ அப்படி உங்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். எப்போதும் மற்றவர்களிடம் ‘புது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டபடி இருப்பீர்கள். சோர்வு அடையமாட்டீர்கள். வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்பீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி, இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் சனி என்பதால், மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவீர்கள்.

மகர ராசி கோயில்கள் :

சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதப் பெருமாளாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் நீங்கள் வழிபட உகந்தவை ஆகும். குறிப்பாக, திருக்கடல்மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள்: திருக்கோளூரில் அருள்புரியும் வைத்தமாநிதி பெருமாளை வழிபட, நலம் உண்டாகும்.

திருவோணம்திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்கி வாருங்கள்; நன்மைகள் உண்டாகும்.

அவிட்டம் 1, 2-ம் பாதங்கள்: சிக்கல் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஆவராணியில் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதரை தரிசியுங்கள்.

கும்பம்
kumbamநீங்கள் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள். தொடர்ந்து பத்து நிமிஷம் பேசிய பிறகுதான், உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியமுடியும். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப் படுத்த முடியும்.

கும்ப ராசி கோயில்கள் :

இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த  ஆலயத்துக்குச் செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்.

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள்: மாயவரம்-கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை தரிசியுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

சதயம்:
 சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்கரை வணங்கினால் நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்: கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்
meenamஉங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 3-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டவையாக அமைந்தி ருப்பதால், உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருப்பதாகக் காட்சி அளிக்கும்.

அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். நீங்கள் ‘பணத்தைவிட மனம்தான் பெரிது’ என்பீர்கள். யாராவது உங்களை அவமானப் படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.

மீன ராசி கோயில்கள் :

மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.

பூரட்டாதி 4-ம் பாதம்: பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கினால் பலன் உண்டு.

உத்திரட்டாதி: மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கினால் நன்மை உண்டாகும்.

ரேவதி:
 கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயரை வணங்குதல் நலம்.