அதிக அளவு காரம் இல்லாமல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த தக்காளி புலாவ் சாதத்தை ஒரு முறை செய்துதான் பாருங்களேன். இதன் சுவைக்கு மீண்டும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகளும் உங்களை தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்

tomato
- Advertisement -

குழம்பு சாதத்தை விட கலவை சாதம் என்றால் அது கொஞ்சம் ருசி அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த சாதம் மசாலாவுடன் கலந்து அதிக நேரம் ஊறிக் கொண்டிருப்பதால் சாதத்தில் சுவை அதிகமாக தெரியும். எனவே இதனை சாப்பிடுவதென்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அவ்வாறு பலரும் அடிக்கடி செய்கின்ற ஒரு உணவு என்றால் தக்காளி சாதம் தான். ஏனென்றால் இதற்கு பெரிய அளவில் காய்கறிகள் எதுவும் தேவையில்லை. தக்காளி, வெங்காயம் இருந்தால் போதும். உடனே இந்த தக்காளி சாதத்தை செய்து விடலாம். ஆனால் எப்போதும் செய்யும் தக்காளி சாதம் மிளகாய் தூள் சேர்த்து பிரியாணி பக்குவத்தில் செய்வதுண்டு. ஆனால் இங்கு மிளகாய்த் தூள் சேர்க்காமல் குழந்தைகளும் சாப்பிடும் வகையில் சுவையான தக்காளி புலாவை எப்படி செய்ய வேண்டுமென்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 2 கப், தக்காளி பழம் – 6, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 7, தேங்காய்ப்பால் – ஒரு கப், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, எண்ணெய் – 3 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், புதினா தழை – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு கப் பாஸ்மதி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனை கழுவி, மறுபடியும் தண்ணீர் ஊற்றி, அதனுடன் கால் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு, அப்படியே ஊற வைக்கவேண்டும். பிறகு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பிரியாணி செய்வதற்கு ஏற்றார் போல் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு கால் மூடி தேங்காயை மிக்ஸியில் சேர்த்து, அரைத்து ஒரு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் கடுகு, சோம்பு மற்றும் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு பட்டை மற்றும் ஏலக்காயை உரலில் வைத்து லேசாக இடித்து சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்கள் மற்றும் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு, இதனுடன் ஒரு கப் தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசியை சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்தால் போதும் சுவையான தக்காளி புலாவ் தயாராகிவிடும்.

- Advertisement -