நீண்ட நேரமாகியும் கெட்டுப் போகாத தக்காளி சட்னி எப்படி தயாரிப்பது? இப்படி ஒருமுறை தக்காளி சட்னியை வித்தியாசமா செஞ்சு பாருங்க இட்லி, தோசை சப்பாத்திக்கு கூட அட்டகாசமா இருக்கும்.

spicy-tomato-chutney
- Advertisement -

எல்லோருக்கும் தக்காளி சட்னி என்றால் ரொம்பவே விருப்பம் தான் ஆனால் சில சமயங்களில் காலையில் வைக்கும் தக்காளி சட்னி மதியம் ஆனதும் கெட்டுப் போனது போல ஒரு வாசனை வரும். எவ்வளவு நேர பயணத்திலும் கெட்டுப் போகாத இந்த தக்காளி சட்னி அதன் சுவையிலும் மாற்றம் தரப்போவதில்லை. ரொம்பவே அருமையான மற்றும் சுலபமான முறையில் தயாரிக்கப்படும் இந்த தக்காளி சட்னி வித்தியாசமான சுவையுடன் அட்டகாசமாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு கூட தொட்டு கொண்டு சாப்பிடலாம். இதை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – ஏழு, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 10, பூண்டு பல் – பத்து, வெந்தயம் – கால் ஸ்பூன், தாளிக்க: நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
இந்த தக்காளி சட்னி செய்ய முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நன்கு சுத்தம் செய்து காம்பு பகுதியை மட்டும் நீக்கி தக்காளி பழங்களை முழுமையாக அப்படியே சேருங்கள். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை மட்டும் தோல் உரித்து கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். 10 பூண்டு பற்களை தோலுரித்து போட்டுக் கொள்ளுங்கள். காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்கப் போகிறோம் எனவே உங்களின் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல வாசனைக்கு கால் ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு குக்கரை மூடி இரண்டு விசில் மட்டும் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

ரெண்டு விசில் விட்டதும் தக்காளி பழங்களின் மேல் தோல் தனியாக வந்து விடும். தக்காளி பழங்களின் தோல் பகுதியை மட்டும் எடுத்துவிட்டு மீதம் இருக்கும் பொருட்களை நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது மத்து இருந்தால் போட்டு கடைந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள்.

- Advertisement -

நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து வறுபட்டதும் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விடுங்கள். பிறகு மூடி போட்டு பத்திலிருந்து 12 நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள வைட் குருமா 10 நிமிடத்தில் எப்படி வீட்டில் செய்வது? மசாலா சேர்க்காத அருமையான வெள்ளை குருமா சுலபமாக இப்படியும் செய்யலாமே!

மூடியை திறந்து இடையே நீங்கள் கலந்து விடுங்கள். இதுபோல செய்து வந்தால் தக்காளி நன்கு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து தெளிந்து மேலே எழும்பும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டியது தான். அவ்வளவு தான், இந்த சட்னியை நீங்கள் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது எடுத்துக் கொண்டு போனால் எவ்வளவு நேரம் ஆனாலும் பிரஷ்ஷாக அப்படியே இருக்கும், கெட்டுப் போகாது. ரொம்ப டேஸ்டியாக இருக்கக் கூடிய இந்த தக்காளி சட்னி ரெசிபி இட்லி, தோசைக்கு மட்டும் அல்லாமல் சப்பாத்திக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அருமையாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -