ஹோட்டல் தேங்காய் சட்னி போல ரொம்பவும் சுவையாக அரைப்பதற்கு இந்த சில பொருட்களை தேங்காய் சட்னியுடன் சேர்த்தாலே போதுமே!

coconut-chutney-recipe
- Advertisement -

ஹோட்டலில் செய்யும் தேங்காய்ச் சட்னி போல நமக்கும் செய்ய வரவில்லை என்று நினைப்பவர்கள் இந்த முறையில் ஒரு முறை தேங்காய் சட்னி அரைத்து பாருங்கள். ஒரு சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் உங்களுடைய தேங்காய் சட்னி ருசி மிகுந்ததாக மாறுகிறது. வித விதமான பொருட்களை சேர்த்து தேங்காய் சட்னி செய்பவர்கள் உண்டு. அந்த வரிசையில் நாம் எந்த பொருட்களை கூடுதலாக சேர்க்க இருக்கிறோம்? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 3, பூண்டு பற்கள் – 4, சீரகம் – ஒரு ஸ்பூன், பொட்டுக்கடலை – அரை கப், துருவிய தேங்காய் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 2.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான தேங்காய் சட்னி செய்வதற்கு கண்டிப்பாக சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும், எனவே இதனை தவிர்க்காதீர்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் காம்பு நீக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகம் போட்டுக் கொள்ளுங்கள். தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது ஒரு சிலரி இஞ்சி சேர்ப்பது உண்டு. இஞ்சிக்கு பதிலாக 4 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியின் வாசம் ஒரு சிலருக்கு தேங்காய் சட்னியில் பிடிக்காமல் போகலாம் எனவே பூண்டு சேர்த்து செய்து பாருங்கள், இன்னும் ருசியாக இருக்கும். உடைத்த பொட்டுக்கடலை அரை கப், துருவிய தேங்காய் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் சட்னியின் கூடுதல் ருசிக்கு தேங்காயை துருவி சேர்த்தால் அருமையாக இருக்கும். தேங்காயைத் துருவ முடியாதவர்கள், தேங்காய் உடைய மேல்தோல் சீவி விட்டு, தேங்காயை நறுக்கி சேர்த்து கொள்ளலாம். இப்போது மிக்ஸியை இயக்கி ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னி செய்யும் பொழுது தூள் உப்பை பயன்படுத்த வேண்டாம். கல் உப்பு சேர்த்து செய்து பாருங்கள், அபாரமான ருசியை கொடுக்கும். இந்த சின்ன சின்ன குறிப்புகளை பயன்படுத்தினால் தேங்காய் சட்னி ஹோட்டலில் செய்தது போலவே அற்புதமாக உங்களுக்கும் செய்ய வரும். உப்பு சேர்த்த பின்பு நைஸாக அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் சட்னி அதிகம் கெட்டியாகவும் இல்லாமல், தண்ணீராகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்கும் பொழுது இட்லி, தோசை இரண்டுக்குமே சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். அதை விட ஊத்தாப்பம், அடை தோசை, உப்புமா, கிச்சடிக்கு எல்லாம் சொல்லவே வேண்டாம், செமயா இருக்கும். இதற்கு ஒரு சிறு தாளிப்பு இப்படி கொடுங்கள். அதற்கு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து பற்ற வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டுங்கள், அவ்வளவுதாங்க! இந்த ஹோட்டல் தேங்காய் சட்னி இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -