பருப்பு இல்லாத ரோட்டுக்கடை ‘உடனடி டிபன் சாம்பார்’ ஒரு முறை இப்படி வச்சு பாருங்க! செம டேஸ்ட்.

sambar4
- Advertisement -

பருப்பு வேக வைக்காமல் ரோட்டுக்கடை ஸ்டைலில் ஒரு டிபன் சாம்பாரை எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி தோசை பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள இந்த சைட் டிஷ் அட்டகாசமாக இருக்கும். நேரமில்லை அவசரஅவசரமாக சாம்பார் வைக்க வேண்டும். அந்த சாம்பார் சுவையாக வேண்டும் என்றால், இந்த சாம்பாரை ட்ரை பண்ணி பாருங்க‌. இட்லியே பிடிக்காதவங்க கூட, சுடச்சுட இட்லி மேல, சுட சுட இந்த சாம்பாரை ஊற்றி கொடுத்தீங்கன்னா 2 இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க. சரி ரெசிபியை பார்க்கலாமா.

sambar5

ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன வெங்காயம் தோலுரித்து – 15 பல், பச்சை மிளகாய் – 1, தோல் உரித்த பூண்டு பல் – 3, மீடியம் சைஸ் தக்காளி நறுக்கியது – 3, சாம்பார் தூள் – 3 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு, இந்த பொருட்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, ஒரு மூடி போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்துக் கொண்டாலும் அது உங்களுடைய இஷ்டம்தான்.

- Advertisement -

வேக வைத்த இந்த விழுதை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

tomato-sambar-idly

இப்போது சாம்பாரை தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 15 பல், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் சுருங்கி வதங்கி வரும்போது பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அரவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு குழம்பை நன்றாக கொதிக்க வையுங்கள். (இந்த குழம்புக்கு நாம் சேர்த்திருக்கும் தக்காளிக்கு 3 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றினால் சரியாக இருக்கும்.)

- Advertisement -

குழம்பு கொதித்துக் கொண்டே இருக்கட்டும். ஒரு மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் பொட்டுக்கடலை போட்டு அந்த பொட்டுக்கடலையை நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு பச்சை வாடை நீங்கி நன்றாக கொதித்து வந்தவுடன், குழம்பு இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு, பொடி செய்து வைத்திருக்கும் பொட்டுகடலைமாவை குழம்பில் சேர்த்து, குழம்பை கலந்துவிட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள் அவ்வளவு தான். சுவையான பருப்பு சேர்க்காத டிபன் சாம்பார் தயார். இந்த சாம்பாரை தாராளமாக மூன்றிலிருந்து நான்கு பேர் சாப்பிடலாம்.

sambar6

பின்குறிப்பு: அரைத்த பொட்டுக் கடலையை சேர்த்து பக்குவமாக குழம்பை கலந்து விட்டுக்கொண்டே இறக்கி விட வேண்டும். பொட்டுக்கடலை சேர்ந்தவுடன் குழம்பு நிறைய நேரம் கொதித்தால் குழம்பு ரொம்பவும் திக்காக மாறிவிடும். பொட்டுக்கடலை சேர்த்தவுடன் குழம்பு மூடி போட்டு எல்லாம் கொதிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இப்படி மட்டும் இட்லி சாம்பார் வைத்து இட்லியின் மேலே சுடச்சுட ஊற்றி இட்லியை, இந்த சாம்பாரில் ஊற வைத்து சாப்பிட்டு பாருங்கள். தொண்டையில் இட்லி இறங்குவதே தெரியாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -