பொங்கல் ஸ்பெஷல் காய் குழம்பை, நாட்டு காய்கறிகளை வைத்து அசல் கிராமத்து சுவையில் ரொம்ப சுலபமா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாமா? பொங்கலுக்கு நீங்களும் இந்த குழம்பை உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க.

- Advertisement -

கிராமங்களில் இந்த பொங்கல் திருநாளில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து வணங்குவார்கள். அப்போது தங்கள் வயலில் விளைந்த காய்கறிகள், பயிறு வகைகளை எல்லாம் வைத்து படைத்து வணங்கி அதை சமைத்து உண்பார்கள். அப்படியான ஒரு சமையல் தான் இந்த நாட்டு காய்கறிகளை வைத்து செய்யப்படும் பல காய்கறி குழம்பு. இதை எப்படி செய்வது என்று இப்போது நாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான காய்கறிகள்

கத்திரிக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, மொச்சை, பரங்கிக்காய், இந்த நாட்டு காய்கறிகள் தான்.

- Advertisement -

இந்த காய்களை எல்லாம் சுத்தம் செய்து அலசி நறுக்கிய பிறகு ஒரு பெரிய பவுலில் வரும் படி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பவுலில் பெரிய எலுமிச்சை பழ அளவிற்கு புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த குழம்பை தாளித்து விடுவோம். இதை தாளிக்க பயன்படுத்தும் பாத்திரத்தை கொஞ்சம் பெரியதாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் காய்கறிகள் வெந்து வர சரியாக இருக்கும். உங்கள் வீட்டில் மண் சட்டி இருந்தால் அதையும் வைத்து செய்யலாம் குழம்பின் ருசி பல மடங்கு கூடி விடும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை வைத்து அதில் 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், 1 காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக 20 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு 2 பச்சை மிளகாய் கீறி எண்ணெயில் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு 2 பெரிய தக்காளி பழங்களை எடுத்து அதையும் பொடியாக நறுக்கி இதில் சேர்த்து அனைத்தும் வெந்து நன்றாக குழைந்து வர வேண்டும். அந்த அளவிற்கு வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்த காய்கறிகளில் மாங்காவை தவிர்த்து மற்ற காய்கறிகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த காய்கறிகளை எல்லாம் சேர்த்த பிறகு மீண்டும் ஒரு முறை வெங்காயம், தக்காளியுடன் இதையும் கலந்து வதக்கி விடுங்கள். இரண்டு நிமிடம் காய்கறிகள் எண்ணெயில் வதங்கிய பிறகு, 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் தனியா தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் உப்பு என அனைத்தையும் சேர்த்து லேசாக எண்ணெயில் பிரட்டிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்.

பத்து நிமிடம் இந்த காய்கறிகள் வெந்த பிறகு கரைத்து வைத்த புளி கரைச்சலை ஊற்றி மாங்காவும் சேர்த்து மூடி போட்டு மேலும் பத்து நிமிடம் கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான கேப்ஸிகம் கிரேவி ரெசிபி இது. குடைமிளகாயை பார்த்தாலே பிடிக்காது என்பவர்கள் கூட, இந்த கிரேவியை விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க.

குழம்பை இறக்கும் போது மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள். இதற்கு சுட சாதத்தை விட, பொங்கல் அன்று வைக்கும் அந்த வெள்ளை சாதத்துடன் இதை சேர்த்து சாப்பிடும் போது பிரமாதமாக இருக்கும். கிராமங்களில் பொங்கல் அன்று எந்தப் பொங்கல் வைத்தாலும் இந்த குழம்பை கட்டாயமாக வைப்பார்கள். இந்த பொங்கலுக்கு நீங்களும் உங்கள் வீட்டில் இந்த காய் குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள். இனி அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.

- Advertisement -