தேங்காய் சேர்க்காமல், இட்லி தோசைக்கு டக்குனு செய்யக்கூடிய 5 மினிட்ஸ் வேர்க்கடலை தண்ணி சட்னி செய்வது எப்படி?

chutney3
- Advertisement -

காரசாரமா ஒரு சட்னி அரைக்கணும். அதில் தேங்காய் சேர்க்கக்கூடாது. அந்த சட்னியில் ஆரோக்கியமும் கிடைக்கணும். அதுவும் குறைந்த நேரத்தில் செய்யணும். எப்படிங்க முடியும். கட்டாயம் முடியும். வேர்க்கடலையை வைத்து தான் இன்னைக்கு சூப்பரான சட்னி, காரசாரமாக அரைக்க போகின்றோம். இட்லி தோசைக்கு இது பக்காவான சைடிஷ். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபி என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை 

முதலில் இதற்கு 1 கைப்பிடி அளவு வேர்கடலை தேவை. வறுத்த வேர்க்கடலையாக இருந்தால், தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வறுக்காத வேர்க்கடலையாக இருந்தால் கடாயில் போட்டு தோல் உரியும் அளவுக்கு வறுத்து ஆற வைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் 1, தக்காளி பழம் 2 நறுக்கியது போட்டு, வதக்க வேண்டும். இதோடு காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் 2, பச்சை மிளகாய் 2 வைத்து, சின்ன கோலி குண்டு அளவு புளி, போட்டு எல்லா பொருட்களையும் வதக்கி விடுங்கள். வெங்காயம் தக்காளி பச்சை வாடை நீங்கி வதங்கியவுடன் இதில் தேவையான அளவு உப்பு, தோல் உரித்த பூண்டு பல் 5, போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த விழுது நன்றாக ஆரட்டும். மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் வதக்கி வைத்திருக்கும் இந்த எல்லா பொருட்களையும் போட்டு, வறுத்து வைத்திருக்கும் வேர்க்கடலையையும் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னியை அரைத்துக் கொள்ளவும். சட்னி நைசாக அரைபடட்டும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி சட்னியை கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இது தண்ணீர் சட்னி என்பதால் இதற்கு உப்பு காரம் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் தான் சுவை தரும். தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய், கடுகு, உளுந்து, கருவாப்பிலை, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து இந்த சட்னியில் கொட்டி கலந்து சுட சுட இட்லி மேல் வார்த்து சாப்பிட்டு பாருங்க. வேற லெவல் டேஸ்ட் இருக்கும். சிம்பிளான சுவை தரும் ஆரோக்கியம் தரும் இந்த சட்னி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கும், கோதுமை மாவும் இருந்தால் 10 நிமிடத்தில் இந்த மொறு மொறு தோசை தயார். ஃப்ரிட்ஜில் தோசை மாவு காலி என்னும் சமயத்தில் இந்த தோசை உங்களுக்கு கை கொடுக்கும்.

பின்குறிப்பு: இந்த சட்னியில் தேவை என்றால் ஒரு இன்ச் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவை தேவை, நிறைய சட்னி தேவை என்பவர்கள், கூடுதலாக 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை வைத்து அரைத்தாலும் இந்த சட்னியில் நல்ல சுவை இருக்கும். வரமிளகாய் மட்டும் வைத்தும் இந்த சட்னி அரைக்கலாம். பச்சை மிளகாய் மட்டும் வைத்தும் இந்த சட்னி அரைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -