ஆந்திராவில் வேர்க்கடலை சட்னி இப்படித்தான் அரைப்பாங்க. இந்த சட்னிக்கு தேங்காய் கூட தேவை இல்லை.

chutney1_tamil
- Advertisement -

ஆரோக்கியம் நிறைந்த வேர்க்கடலையை வைத்து சூப்பரான ஒரு சட்னி ரெசிபி. ஆந்திரா பக்கத்தில் புதினா சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக வேர்க்கடலை சட்னி அரைப்பார்கள். இதில் தேங்காய் சேர்க்க மாட்டார்கள். இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தப்பம், சப்பாத்தி, பணியாரம், என்று இந்த சட்னியை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுலபமான கொஞ்சம் வித்தியாசமான சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.

வேர்க்கடலை புதினா சட்னி செய்முறை
இந்த சட்னிக்கு கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா இந்த 3 பொருட்களும் தேவை. மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்துக் கொள்ளலாம். மூன்று பொருட்களையும் ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து கழுவி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை சேர்த்தும் இந்த சட்னி செய்யலாம். கருவேப்பிலை சேர்க்காமலும் இந்த சட்னி செய்யலாம். ஆனால் கட்டாயமாக புதினா கொத்தமல்லி தழை சேர்த்துக்கோங்க.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து 1 டேபிள் ஸ்பூன் போட்டு, லேசாக வறுத்து விட்டு, அதில் பூண்டு 4 பல், வறுத்த வேர்க்கடலை 1/2 கப் போட்டு வறுக்க வேண்டும். வறுத்த வேர்க்கடலையாக இருந்தால் உளுந்து நன்றாக வறுபட்ட பின்பு, வேர்க்கடலையை சேர்த்து ஒரு நிமிடம் வரை எண்ணெயில் பிரட்டி விட வேண்டும். வருக்காத வேர்க்கடலை என்றால் வேர்க்கடலையை உளுந்தோடு போட்டு நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.

வேர்க்கடலை உளுந்து சிவந்து வந்த பிறகு மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் 1, வெட்டி போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வந்ததும் தயாராக எடுத்து வைத்திருக்கும் கருவேப்பிலை, மல்லித்தழை, புதினா இந்த 3 பொருட்களையும் போடுங்க. இந்த மூன்று வகை கீரைகளும் நன்றாக எண்ணெயில் வதங்கி, சுருண்டு வந்த பிறகு, வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, புளி – சின்ன எலுமிச்சம்பழம் அளவு, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விட வேண்டும். தேவைப்பட்டால் வரமிளகாய் பச்சை மிளகாய் முதலில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டோம் அல்லவா, அப்போது கூட சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம். உங்களுக்கு காரத்திற்கு ஏற்ப மிளகாய்களை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெறும் பச்சை மிளகாயகவும் வைக்கலாம். வெறும் வர மிளகாய் வைத்தும் இந்த சட்னி அரைக்கலாம். எல்லா பொருட்களையும் வதக்கி விட்டு அடுப்பை அணைத்துவிட்டு, இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக, கொஞ்சம் திக்காக அரைச்சுக்கோங்க. அரைக்கும் போது தேவையான அளவு உப்பு போடுங்க. இந்த சட்னி அரைபட்ட பின்பு தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இந்த சட்னிக்கு நல்லெண்ணையில் தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 ஸ்பூன் எண்ணெயில், கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், தாளித்து கொட்டி அப்படியே கலந்து பரிமாறினால் அருமையான சுவை இருக்கும். உங்களுக்கு இந்த வித்தியாசமான ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். குறிப்பா சாப்பாட்டில் தேங்காய் சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு இந்த சட்னி ரொம்பவும் பயனுள்ள குறிப்பாக இருக்கும்.

- Advertisement -