கிராமத்து ஸ்டைலில் தேங்காய் சட்னியும், கார சட்னியும் இப்படி செஞ்சா 10 இட்லி கூட பத்தாது! சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்.

kara-chutney-coconut
- Advertisement -

கிராமத்து ஸ்டைலில் இப்படி சட்னி அரைத்து கொடுத்தால் எவ்வளவு இட்லி இருந்தாலும் நமக்கு பத்தவே செய்யாது. அப்படி ஒரு அருமையான சுவை தரும் இந்த தேங்காய் சட்னி மற்றும் காரச்சட்னி காம்பினேஷன் எப்படி இருக்கும்? இந்த இரண்டு சட்னிகளையும் தனித்தனியாக சாப்பிடுவதை விட, ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பொழுது தான் அதற்கு சுவை அதிகம். ரொம்ப ரொம்ப சுலபமா கொஞ்சம் பொருட்களை வைத்து நொடியில் செய்து விடலாம். வாருங்கள் அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

coconut-milk-waste

கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – அரை கப், பொட்டுக் கடலை – அரை கப், சின்ன வெங்காயம் – 4, வர மிளகாய் – 10, புளி – ஒரு சிறு நெல்லிக்காயளவு, பூண்டு – 4 பல், இஞ்சி – ஒரு இன்ச் அளவிற்கு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவிற்கு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2 கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை பின்புறம் இருக்கும் தோல் பகுதியை நீக்கி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளலாம் அல்லது தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதனுடன் அரை கப் அளவிற்கு பொட்டு கடலை, உரித்த சின்ன வெங்காயம், வர மிளகாய், தோலுரித்த பூண்டு பற்கள், புளி சிறிதளவு, இஞ்சி ஒரு துண்டு, கறிவேப்பிலை ஒரு கொத்து, தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

chutney3

இந்தச் சட்னி தண்ணீர் போல நீர்க்க இருக்க வேண்டும் என்பதால் அதற்கு தேவையான அளவிற்கு தண்ணீரைச் தாராளமாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து அப்படியே மூடி வைத்து விடுங்கள். நீங்கள் பரிமாறும் பொழுது தான் அதனை கிளற வேண்டும்.

- Advertisement -

கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ஒரு கப், புளி – சிறிதளவு, வெறும் மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

chinna-vengayam

கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து ஒரு கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் 2 சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டை பிடித்து புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் வெறும் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

கைகளில் எடுத்தால் பந்து போல கெட்டியாக வர வேண்டும். பின்னர் அதன் மீது தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்து விட வேண்டும். தேங்காய் எண்ணெய் சேர்க்க விரும்பாதவர்கள் இதில் சிறு தாளித்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதாங்க ரொம்ப சுலபமா இந்த ரெண்டு சட்னியும் செய்து விடலாம். இவற்றை ஒன்றாக கலந்து இட்லி, தோசையுடன் சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையான சுவையுடன் நாவின் நரம்புகள் நர்த்தனம் ஆடும். நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -